"தமிழின் பெரியதொரு திருப்புமுனையாளரான கல்கி, தமிழ்ச் சரித்திரக் கதைகளின் பிதாமகர். அவரது ‘பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’ போன்ற சரித்திரக் கதைகள் தமிழ் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவை.
அவற்றுக்கு நிகராக - இன்னும் ஒருபடி மேலாக தலைமுறைகள் கடந்து மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும், மீண்டும் மீண்டும் கொண்டாடப்படும் அற்புதம், பொன்னியின் செல்வன். ஐந்து பாகங்களில் ஆறு ஆண்டுகள் கல்கி இதழில் தொடராக வெளிவந்த பொன்னியின் செல்வன், இதுவரை சென்றடைந்த இதயங்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும்.
சோழர்களின் பொற்கால ஆட்சியைப் பற்றி சரித்திர நூல்களில் இருந்து தெரிந்துகொண்டதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனில் இருந்தே பெரும்பாலான தமிழர்கள் ஆர்வத்துடன் கற்றிருக்கிறார்கள்.
தமிழர்களின் உயிரோடும் உணர்வுகளோடும் ஒன்றிக் கலந்துவிட்ட பொன்னியின் செல்வனை திரும்பத் திரும்ப வாசியுங்கள். அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள்."